நீரின் அழுத்தம், மின் விசை, எந்திரக் கட்டுப்பாடு என்பதெல்லாம் பாமரர்களுக்குப் புரியாதவை. எனினும் இவற்றைச் செயல் படுத்தினால் விமானங்களுக்கே கூட வேண்டிய பாகங்களைச் செய்து கொடுக்கலாம்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இயங்கி வந்த மூக் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் தீபக்த தோட்டி (Deepak Dhadoti). அங்கு சர்வோ கன்ட்ரோலர்கள் என்னும் எந்திர பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தில் அவருக்கு வேலை. இது மாதிரியான தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் இந்தியாவில் எதுவும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டார் தீபக்.
தாமே ஏன் அந்தத் தொழிலில் இறங்கக் கூடாது என்று நினைத்தவர், தமது சகோதரரையும் சேர்த்துக் கொண்டு இந்தியாவில் தமது நிறுவனத்தைத் தொடங்கினார். துவக்கத்தில் இத்தகைய சாதனங்களைப் பழுது பார்த்துத் தருவதற்கே அதிக முக்கியத்துவம் அளித்தார்.
நாளடைவில் தமது தொழிலை உற்பத்தி சார்ந்த தாகவும் மாற்றிக் கொண் டார். இத்தனைக்கும் இவர் தமது முதல் உற்பத்திக் கூடத்தைத் தமது வீட்டின் புழக்கடைப் பகுதியிலேயே ஆரம்பித்தார் என்பது கவனிக்கத்தக்கது.
விமானங்களுக்குத் தேவைப்படும் கருவிகள் முதல் கொண்டு விண்வெளிக்குச் செல்லும் ஏவு கணைகளுக்கான கட்டுப்பாட்டுச் சாதனங்கள் வரை பலவற்றையும் தயாரிக்கத் தொடங்கினார். வளர்ச்சி அடைந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் பெல் காம் பகுதியில் உத்யம்பாக் என்ற இடத்தில் இவரது தொழிலகம் இயங்கி வருகிறது.
சர்வோ கன்ட்ரோல்ஸ் (Servo Controls) என்ற பெயரில் இயங்கி வரும் இவரது நிறுவனம் பல அரிய தொழில்நுட்ப விருதுகளையும் வென்றுள்ளது. விமானங்களில் தொடங்கி விவசாயத் தேவைகள் வரை பல்வேறு கருவிகளையும் சாதனங்களையும் இவரது நிறுவனம் தயாரித்து அளிக்கிறது.
வாடிக்கையாளர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு அவர்கள் கேட் கும் விதத்திலான சாதனங்களை உருவாக்கிக் கொடுக்கிறார்கள். வாகனத் தொழில், கட்டுமானம், சுரங்கத் தொழில் போன்ற துறைகளுக்கும் இவர்களது தயாரிப்புகள் பெரிதும் தேவைப்படுகின்றன.
– சுதா தனபாலன்