தமிழ் நாட்டில் இருந்து தயாரிக்கப்படும் ஆயத்த ஆடைகள் முதல் பல்வேறு ஜவுளி உற்பத்திப் பொருட்கள் அதிக அளவில் உள்நாட்டிலும் விற்பனை ஆகின்றன. ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. ஒன்றிய அரசின் 2021-22 நிதிநிலை அறிக்கையில் இறக்குமதி பஞ்சுக்கு 11% இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. இது அந்த துறையை கடுமையாக பாதித்தது. குறிப்பாக திருப்பூர் ஆடைகள் உற்பத்தியும், ஏற்றுமதியும் பெரிய அளவில் பாதிப்பு அடைந்தது. இதனால் இறக்குமதி பஞ்சு மீதான சுங்க வரியை நீக்க வேண்டும் என்று அந்த துறை சார்ந்தவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து இந்த சுங்க வரியை ஒன்றிய அரசு நீக்கி ஆணை பிறப்பித்து உள்ளது.
இது குறித்து ஆடைகள் உற்பத்தித் தொழிலில் உள்ளவர்கள், ”நம் நாட்டில் உள்ள நூற்பாலைகள் பஞ்சு விலை உயர்வால் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்தன. விலை உயர்வை கட்டுப்படுத்த இறக்குமதி வரியைக் கைவிட கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தோம். அதன் அடிப்படையில் இறக்குமதி வரியை செப்டம்பர் 30 வரை ரத்து செய்து உள்ளது. செப்டம்பர் 30 வரை என்பது போதாது. தொடர்ந்து இந்த சுங்கவரியை முழுவதுமாக நீக்க வேண்டும்.” என்கின்றனர்.