Latest Posts

கருணாசின் அன்றைய லட்சியம் என்னவாக இருந்தது?

- Advertisement -

மனிதர்களின் வாழ்க்கை வாய்ப்புகளால் நிரம்பியது. அந்த வாய்ப்புகளை எப்படி சிறப்பாக பயன்படுத்துகிறார்களோ அதைப் பொறுத்தே அவர்களின் வெற்றி அமைகிறது. அதற்கான சரியான சான்றாக திகழ்பவர் இன்றைக்கு திருவாடானை சட்ட மன்ற உறுப்பினராக இருக்கும் திரு. கருணாஸ் முதலில் ஒரு பாப் பாடகராக அறியப்பட்டவர். பன்னிரெண்டு வயதிலேயே கானா பாடல்களைப் பாடியவர்.

புதுக்கோட்டை, தாஞ்சூர் கிராமத்தில் இருந்து வந்து சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தவர். சென்னையில் மேஸ்ட்ரோஇசைக்குழு நடத்தி புகழ் பெற்றவர். ஒரு இசைப் போட்டியின் போது அங்கே பாட வந்து இருந்த அதுவரை சென்னை பூந்தமல்லி சிஎஸ்ஐ சர்ச்சில் பாடிக் கொண்டு இருந்த கிரேஸ் இவரது கவனத்தைக் கவர, இவருடைய இசை நிகழ்ச்சிகளில் அவரை பாட அழைக்க, அவர் பாட இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டார்கள். இன்றைக்கு முக்குலத்தோர் புலிப்படை என்று ஜாதிக் கட்சி நடத்தினாலும், தொடக்க காலங்களில் அவரை ஒரு ஜாதி சார்ந்து செயல்படுபவராக யாரும் கண்டது இல்லை. ஏன் இவரது மனைவி கிரேஸ் கூட வேறு ஜாதி, வேறு மதத்தைச் சார்ந்தவர்தான். இப்படி ஜாதி கலப்பு திருமணம் செய்து கொண்ட இவர் எப்படி, ஜாதி சார்ந்த கட்சியைத் தொடங்கினார் என்று இன்றும் அவரது நண்பர்கள் திகைக்கிறார்கள்.

இயக்குநர் திரு. பாலா, நந்தா படத்தில் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி, அனைவரையும் கவரும் வண்ணம் ‘லொடுக்கு பாண்டி’ என்ற வேடத்தில் வந்து அனைவரையும் சிரிக்க வைத்ததோடு திரைப்பட இயக்குநர்களின் பார்வையையும் தன் மேல் பட வைத்தார்.அதைத் தொடர்ந்து சுமார் நூறு படங்களுக்கு மேல் நடித்துத் தள்ளினார். கிரேசும் திரைப்படங்களில் நிறைய பாடி இருக்கிறார்.

ஒரு வாய்ப்பு வந்தபோது, அதையும் சரியாக பயன்படுத்தி, சட்ட மன்ற உறுப்பினர் ஆகவும் இடம் பெற்று விட்டார். ஆனால் தொடக்க காலங்களில் அவர் இலக்கு என்னவாக இருந்தது? அவரே கூறுகிறார்.

”தொடக்க காலத்தில் நான் வேலை பார்க்காத ஓட்டல்களே இல்லை. அந்த அளவுக்கு நான் அலைந்து இருக்கிறேன். ஆனால் இசைத் துறையில் சாதிக்க வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. ஏஆர் ரகுமானும், ரஜினியும் இணைந்த ஒரு படத்தின் பாடல்கள் எந்த அளவுக்க பேசப்படுமோ, அந்த அளவுக்கு கருணாஸ் வெளியிடும் தமிழ் பாப் பாடல்களும் பேசப்பட வேண்டும் என்று நினைத்தேன். அதன் ஒரு பகுதியாக, ‘ஐசா லக்கடி மெட்டு’ பாப் பாடல்களை வெளியிட்டேன். அந்த பாடல்கள் இசை விரும்பிகளால் பாராட்டப் பட்டது. இதற்கு முன்னால் வேறு ஒரு குழுவில் இரண்டு பாடல்கள் பாடி இருந்தேன்.

பாப் என்பது தனிப்பாடல். தனி ஒருவனாக பாடி நடன அசைவுகள் செய்வதுதான் பாப். அதன் பிறகு ‘ஷாக்’ என்ற பெயரில் ஒரு ஆல்பம் வெளியிட்டேன். அடுத்து கல்லூரி வாசலிலே என்று ஒரு ஆல்பம் வெளியிட்டேன். அந்த ஆல்பத்தில் உள்ள மூன்று பாடல்களுக்கு படப்பிடிப்பு நடத்தி நடனங்களுடன் அங்குள்ள தனியார் தொலைக்காட்சியில் வெளியிட்டார்.

தமிழில் பாப் புகழ் பெறாததற்கு காரணம் நல்ல பாப் கலைஞர்கள், தரமான தயாரிப்பாளர்கள் இல்லாததுதான் என்று கருதுகிறேன். தொலைக்காட்சிகளின் ஆதரவும் போதாது. இப்போது யூடியூப் சேனல்கள் வந்து இருப்பதால் ஆர்வம் உள்ளவர்கள் இந்த துறையில் இறங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. உலக அளவில் சில தமிழ் இளைஞர்கள் இந்த முயற்சிகளில் இறங்கு இருப்பதையும் பார்க்க முடிகிறது.

தமிழ்நாட்டில் மக்களைக் கவரும் வகையில் பாப் ஆல்பம் வெளியிடுவேன்; அது லட்சக் கணக்கான மக்களால் விரும்பிக் கேட்கப்படும் என்ற நம்பிக்கையில் அப்போதெல்லாம் செயல்பட்டுக் கொண்டு இருந்தேன். என்னை பிரபலப்படுத்திக் கொள்ள நானே நிறைய போஸ்டர்களை விதம் விதமாக போஸ் கொடுத்து அடித்து நகரெங்கும் ஓட்டி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறேன்.

என்னைப் பொறுத்த வரை இலட்சம் பேர் இருந்தாலும், அதுல கருணாஸ்னா தனியா தெரியணும். அப்புறம் தமிழ்நாட்டின் தலைசிறந்த இன்னசைக் குழ் என்றால் அது மேஸ்ட்ரோ ஆக இருக்கணும் என்றெல்லாம் விரும்பி இருக்கிறேன்.” – திரு. கருணாசின் இந்த இலக்குகளை எல்லாம் மீறி வேறு திசையில் பெரிதாக வளர்ந்து இருக்கிறார். அரசியல், சினிமா இரண்டிலும் முத்திரை பதித்த கையோடு தன் மகன் கென் கருணாசையும், திரு. வெற்றிமாறன் இயக்கத்தில், அசுரன் படத்தில் நடிக்க வைத்து புகழ்பெறச் செய்து விட்டார். தொடக்க கால அவரது லட்சியங்களைத் தாண்டி இன்றைக்கு பெரிய உயரங்களைத் தொட்டு இருக்கிறார் என்றால் அதற்கு முதன்மையான காரணம் தன்னுடைய இலக்கு என்னவாக இருந்தாலும் வந்த புதிய வாய்ப்புகளை சரியான பயன்படுத்திக் கொண்டார் என்பதுதானே?

– எவ்வி

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news