ஃபேஸ்புக்கின் ஸ்டோரீஸ் வெற்றி பெறுகிறதா?

தன் மீது கொண்ட நம்பிக்கையில் சிறிது பிழை ஏற்பட்டாலும் அதை சரி செய்து, மீண்டும் தன்மேல் கொண்ட அந்த நம்பிக்கையை மீட்டு எடுப்பது என்பது எந்த ஒரு நிறுவனத்திற்கும் சற்று சிரமமான காரியம்தான். ஒரு முறை தன் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இழந்து விட்டால், பிறகு தான் செய்யும் சிறு தவறுகளும் பூதாகரமாக ஆக்கப்பட்டு தன்னை கவனிக்கத் தொடங்கி விடுவார்கள், வாடிக்கை யாளர்கள். அது போன்ற ஒரு கட்டத்தில் தான் இருக்கிறது, இப்போது ஃபேஸ்புக் நிறுவனம்.

சில மாதங்களுக்கு முன் நடந்த தொழில்நுட்பக் கோளாறுகளுக்குப் பிறகு, ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீதும் இது போன்ற ஒரு கண்காணிப்பு தொடங்கி விட்டது. தன்னுடைய தொழில்நுட்பத் தவறுகளால் 50 மில்லியன் கணக்குகள் பாதிக்கப்பட்டு விட்டது என்றும், 90 மில்லியன் பயனாளிகள் தங்களுடைய கணக்குகளை மூடி விட்டு, ஃபேஸ்புக்கில் இருந்து விலகி விட்டார்கள் என்றும் நிறுவனம் தெரிவிக்கிறது. இதை நாம் சிறிய சிக்கல் என்று பார்க்க முடியாது.

Also read: அப்டேட் தரும் பயன்கள்

தொழில்நுட்பக் கோளாறுகள்தான் இந்த பாதிப்புக்கு காரணம் என்று தெளிவாக சொல்லவில்லை நிறுவனம். ஐரிஷ் (Irish) நாட்டு தகவல் பாதுகாப்பு மையம், இந்தப் சிக்கலை இப்போது ஆய்வு செய்து வருகிறது. ஐரோப்பா யூனியன் பொதுத் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை ஃபேஸ்புக் நிறுவனம் மீறி இருக்கிறது என்று தெரிய வந்தால், அதன்மேல் 1.6 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு தான் இழைக்கும் தவறுகளால் பாதிக்கப்படு வோர்களின் எண்ணிக்கையை எப்போதும் குறைத்து மதிப்பிடுவதுதான் வாடிக்கை என்றாலும், இந்த முறை என்னவோ நடந்த தவறுக்கு உடனடியாக பொறுப்பேற்று, அதை செப்பனிடும் பணியைத் தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சி, ஏற்கனவே நடந்த இது போன்ற ஒரு தவறை நினைவு படுத்துகிறது. இதன் மூலம் நிறுவனத்திற்கு சந்தை மதிப்பில் 3 சதவிகித வீழ்ச்சி வேறு.

அன்றைய தினத்தில் டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் மீது அரசு எடுத்த நடவடிக்கையினால் அது சந்தித்த இழப்பைக் காட்டிலும், இது சற்று அதிகமானதாகும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே தவறு செய்வதைக் கண்டதும், மக்களுக்கு அந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது. “ஃபேஸ்புக்”, “பாதுகாப்பான தகவல்” இந்த இரண்டு சொற்களுக்கும் தொடர்பு இல்லையோ என மக்கள் நினைக்கும் அளவிற்கு நிலைமை ஆகிவிட்டது.

ஸ்னாப் ஷாட் (Snap Shot) அறிமுகப்படுத்தி, இன்ஸ்டாக்ராமால் (Instagram) பின்பற்றப்பட்டுக் கொண்டு இருக்கும் ‘ஸ்டோரி’ எனப்படும் சிறிய காணொளிக் காட்சிகளை வெளியிடுவது தான் இப்போது ஃபேஸ்புக் எடுத்துக் கொண்ட சவாலாகும். ஃபேஸ்புக்கின் நான்கு கிளைகளிலும் இந்தக் காணொளி தொகுப்பு பதிவீடுகளை காணலாம். இன்ஸ்டாக்ராம் மற்றும் ஃபேஸ்புக் தன்னுடைய பக்கத்தில் மேல் உச்சியில் இதை பதிவு செய்வதன் மூலம், பயனாளர்களை, இந்தக் காணொளி என்னவென்று பார்த்துவிட்டு பிறகு மற்றதை பார்ப்போம் என்ற தூண்டுதலை உருவாக்குகிறார்கள்.

மெசஞ்சரிலும், வாட்சாப்பிலும் இந்த ‘ஸ்டோரீஸ்’ வசதி இருந்தாலும். ஃபேஸ்புக் நிறுவனம் விளம்பரங்களுக்காக இதை பயன்படுத்தச் சொல்லித் தூண்டுகிறது. அனால், இந்த ஸ்டோரீஸ் மூலம் வரும் வருமானம், நியூஸ்ஃபீட் மூலம் வரும் வருமானத்தை விட குறைவுதான்.

ஸ்மார்ட் ஃபோன்கள் தான் இனிமேல் இணையத் தளத்திற்கு எளிய வழியில் மக்களை கூட்டிச் செல்லும் என்று முன்பே சுக்கர்ஸ் பெர்க் கணக்கு போட்டு வைத்து இருந்தார். அதனால்தான் சாதாரண ஃபோட்டோக்களை போடு வதை விடவும், இது போன்ற சிறிய காணொளிகளை வெளியிடுவது, மேலும் சுவையாகவும், உண்மைத் தன்மை உள்ளதாகவும் இருக்கும் என்று நம்பினார்.

அனால், இந்த ஸ்டோரீஸ் பதிவிடுவது, இன்னும் பிற தளங்களில் இருப்பதாலும், தான் நினைத்தது போல் மக்கள் அனைவரும் இந்த செயலிக்குப் பின் செல்வார்கள் என்ற எண்ணம் பொய்த்த தாலும், சுக்கர்ஸ் பெர்க்கின் கணக்கு பாழாகிவிட்டது.

Also read: முகநூலில் யூடியூப் சேனல் இணைப்பது எப்படி? டிஜிட்டல் மார்க்கெட்டிங் -9

செப்டம்பர் 26 -இல் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஃபேஸ்புக் பிரமுகர்கள், ஒவ்வொரு நாளும் ஏறக் குறைய 300 மில்லியன் மக்கள் இந்த ஸ்டோரீஸ் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளார்கள் என்று கருத்து தெரிவித்தார்கள்.

ஆனால், அந்த ஸ்டோரீஸ் போலவே, அதன் பிரபலமும் குறுகிய காலம் கொண்டதாகவே இருக்கிறது. இதற்கு இடையே, ஸ்னாப் ஷாட் நிறுவனமும், இந்தக் காணொளி பதிவு சற்று பின்னடைவை சந்தித்து உள்ளது என்று தெரிவித்தது. ஃபேஸ்புக் நிறுவனமோ நேரலை காட்சித் தொகுப்பு பற்றி மக்கள் இடையே நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிவித்தது.

தங்களுடைய விளம்பர நிறுவனங்களிடம், மக்கள் ஏற்கனவே படம் பிடித்து வெளியிடும் காட்சிகளை விட, நேரலைக் காட்சிகளை அதிகம் விரும்புவதாக கூறினார்கள். 2017 இல் வெளியிடப்பட்ட 5 காணொளிகளில் ஒன்று நேரலையாக இருந்தது என்றும் பெருமை பொங்க சொன்னார்கள். அதே பெருமைதான் இன்றும் மெசஞ்சர் அல்லது ஃபேஸ்புக்கில் ஸ்டோரீஸ் பார்க்கும் மக்களைக் காணும் போதும் அவர்களுக்கு ஏற்படுகிறது. காணொளிகள் உள் அடக்கிய தளங்கள் நிறைய வந்து விட்டதால், ஃபேஸ்புக்கின் ஆர்வம் குறைந்து விடும் என்று சொல்ல முடியாது.

– முனைவர். பார்வதி அழகர்சாமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here