ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா?

சிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் ஊழியர்களை நன்றாக வழி நடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் –
உங்கள் ஊழியர்களுக்கு ஒரு பணியை வழங்கும் போது, அதை எப்படி செய்ய வேண்டும் என்று தெளிவாக சொல்ல வேண்டும். முடிந்தால் அதை எழுதிக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக வேலை நடக்கும். நீங்கள் பட்டும் படாமல் ஒரு செய்தியை சொல்லி விட்டு பின் அது நடைபெறவில்லை என்று சொல்லக் கூடாது.
ஒரு பணியை ஒப்படைக்கும் போது அந்த பணி முடிவடைய வேண்டிய நேரத்தையும் பணியாளர்களிடம் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் வேலை முடியும். சரியான இடைவெளியில் அவர்கள் அந்த வேலைகளை செய்கிறார்களா என கண்காணிக்க வேண்டும். அதே நேரம் நச்சரிக்கவும் கூடாது.

நம் ஊழியர்களை மற்றவர்கள் முன் திட்டுவதோ, கண்டிப்பதோ கூடாது. எந்த சிக்கல்களிலும் நம் பணியாளர்களை விட்டுக் கொடுக்கக் கூடாது. நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் சிக்கல்களை புரிந்து வேலை வாங்க வேண்டும்.
நம் ஊழியர்களுக்கு இந்த செய்திகளில் நாம் இப்படித் தான் எதிர்பார்ப்போம் என தெளிவாக தெரிய வேண்டும். அப்போது தான் ஒரு ஒழுங்கு முறை இருக்கும்.
எப்போதும் நாம் பார்ப்பதற்கு உற்சாகமாக இருக்க வேண்டும், அப்போது தான் நம் ஊழியர்களும் உற்சாகமாக வேலை செய்வார்கள். நாம் செய்யும் எந்த வேலையையும் திருத்தமாகவும், நேர்த்தியாகவும் செய்ய வேண்டும் அப்போதுதான் நம் ஊழியர்களும் அப்படி செய்ய முற்படுவார்கள்.

பிறந்தநாள், திருமண நாள் போன்றவற்றை அலுவலகத்தில் கொண்டாடலாம் இதனால் அவர்களிடையே உற்சாகம் பிறக்கும்.
நேர்மை அனைத்து மட்டத்திலும் இருக்க வேண்டும், அதை நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும்.

நம்மிடம் வேலை பார்ப்பவர்கள் நம்மிடம் உள்ள குறைகளை சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ள வேண்டும், நம் தவறுகளை சொல்வதின் மூலம் அவர்கள் நமக்கு உதவிதான் செய்கிறார்கள்.

– சந்தோஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here