ஆடைத் தொழில் பொருட்காட்சிகள்

0
79

பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியை மேம்படுத்த பல்வேறு அமைப்புகள் சார்பில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் கண்காட்சிகள் நடைபெறுகின்றன.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம்

ஏஇபிசி என சுருக்கமாக அழைக்கப்படும் ஆயத்த ஆடை மேம்பாட்டு கழகம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் உள்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கான இந்தியா-இன்டர்நேஷனல் எனும் ஆடைகள் பொருட்காட்சி புது டெல்லிக்கு அருகே உள்ள நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போர்ட் மார்ட் வளாகத்தில் வரும் ஜனவரி 16, 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெறுகிறது. இந்த பொருட்காட்சியில் நமது நாட்டு ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள் குளிர்கால ஆயத்த ஆடைகளை காட்சிப் படுத்த உள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா உள்ளிட்ட உலகளாவிய நாடுகளை சேர்ந்த ஆயத்த ஆடை வணிகர்கள் இக்காட்சியை பார்வையிட வருகை தர உள்ளனர். தமிழ் நாட்டில் இருந்தும் வாய்ப்பு உள்ளவர்கள் இந்த காட்சிக்கு சென்று பார்த்துப் பயன்பெறலாம். (indianapparelfair.com)

இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம்
சிஎம்ஏஐ என அழைக்கப்படும் இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம் நாடு முழுவதும் இருபது ஆயிரம் ஆயத்த ஆடை உற்பத்தி, ஏற்றுமதி, சில்லரை மற்றும் மொத்த ஆடை வர்த்தக நிறுவனங்களை உறுப்பினராக கொண்டு உள்ளது.

இந்த அமைப்பு ஆயத்த ஆடை துறையினருக்கு வர்த்தக வாய்ப்பை பெற்றுத் தரும் நோக்கத்தில் ஆண்டுதோறும் பொருட்காட்சியை நடத்தி வருகிறது. இதன்படி இந்த ஆண்டின் தேசிய ஆடைகள் காட்சியை வரும் ஜனவரி 30 மற்றும் 31 தேதிகளில் மும்பையில் உள்ள பொருட்காட்சி அரங்கில் நடத்துகிறது.

உள்நாட்டு ஆடை உற்பத்தித் துறையினர் இந்த பொருட்காட்சிக்கு செல்வதன் மூலம் இன்றைய தொழில் நிலவரத்தை அறிந்து கொள்ளலாம். (cmai.in)

தாய்லாந்து கண்காட்சி

ஆசியாவின் நான்காவது மிகப்பெரிய பொருட்காட்சியாக கருதப்படும் ஒன் டூ ஒன் கிரியேஷன் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் கார்மென்ட் மற்றும் எம்ப்ராய்டரி கண்காட்சி தாய்லாந்து நாட்டில் உள்ள இப்பேக்ட் காட்சி வளாகத்தில் வரும் ஆண்டு மார்ச் மாதம் 29 ந் தேதி தொடங்கி ஏப்ரல் 1 ஆம் தேதி வரை நடக்கிறது.

இந்த கண்காட்சியில் பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்று அதிநவீன தையல் எந்திரங்கள், ஸ்கிரீன் பிரின்டிங், எம்ப்ராய்டரி உள்ளிட்ட ஆடை உற்பத்தி எந்திரங்களை காட்சிப் படுத்த உள்ளனர்.

இதில் புதுவகை எந்திரங்களும் அறிமுகப் படுத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

– ஏ.எம்.ஜஹாங்கீர் – திருப்பூர்.